Tag Archives: then

காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள்

காளிதேவியே அங்காளம்மனாகப் பிறந்தாள். “அங்காளம்என்ற சொல்லுக்கு இணைதல்என்று பொருள். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவதரிசனம் பெற்றான். பிறவியை முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதத்தாலும் தன்னை அழிக்க முடியாது என்று வரம் பெற்றான். இதனால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் தேவர்களை துன்பப்படுத்தினான். அழியாவரம் பெற்ற அவன் 108 பெண்களை மணந்தாலும் குழந்தை வரம் மட்டும் கிடைக்கவில்லை.குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாளகண்டனின் கொடுமைக்கு முடிவு கட்ட சிவன் முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, காந்திமதி, மாரியம்மன், காளியாகவும் ஆறு பிறவிகள் எடு. ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன்படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள். காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள்.அவளது அங்கம் வெந்தது. அங்கம் என்றால் உடல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கத்தில் இருந்து அவள் பிறந்ததால் அங்காளம்மன்எனப்பட்டாள்.